ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி போதை பவுடர் பறிமுதல்
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த ரூ.110 கோடி போதை பவுடர் பறிமுதல்
ADDED : செப் 27, 2024 02:13 AM

சென்னை:சென்னையில் இருந்து சரக்கு கப்பலில், ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற, 112 கிலோ 'சூடோ எபிட்ரீன்' போதைப் பொருளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம், ஆஸ்திரேலியா நாட்டிற்கு சரக்கு கப்பல் புறப்பட தயாராக இருந்தது. அந்த கப்பலில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக, சென்னை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த துறையின் தனிப்படையினர், ஆஸ்திரேலியா செல்ல தயாராக இருந்த சரக்குக் கப்பலில் சோதனை செய்தனர். சரக்கு பெட்டகங்களை பரிசோதித்த போது, ஒரு கன்டெய்னரில், 450 பைகள் இருந்தன.
அவற்றில் தலா 50 கிலோ, டியூப் லைட் தயாரிக்க பயன்படும் குவாட்ஸ் பவுடர் என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதிலிருந்த, 39 பாக்கெட்டுகளை ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்தனர்.
ஆய்வில், குவாட்ஸ் பவுடர் என்ற பெயரில், 'சூடோ எபிட்ரீன்' என்ற போதைப்பொருள் இருப்பது உறுதியானது. மொத்தம், 112 கிலோ சூடோ எபிட்ரீன் போதைப் பொருளை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 110 கோடி ரூபாய்.
இவற்றை, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்த சென்னையைச் சேர்ந்த அபுதாஹிர், 30, அகமது பாஷா, 35, என்ற இரு ஏஜன்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, இரு ஆடம்பர கார்கள், 4 லட்சம்ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சூடோ எபிட்ரீன், போதை மாத்திரைகள், மெத்தம் பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் தயாரிப்புக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் பின்னணியில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.