'தொலைதுார கிராமங்களுக்கும் போதை பொருள் வந்து விட்டது' -
'தொலைதுார கிராமங்களுக்கும் போதை பொருள் வந்து விட்டது' -
ADDED : மார் 03, 2024 02:33 AM

சென்னை: தமிழகத்தின் தொலைதுார கிராமங்களுக்கும், போதைப்பொருள் வந்து விட்டதாகவும், பள்ளி குழந்தைகளை போதையில் இருந்து மீட்க போராடி வருவதாகவும், ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
டில்லியில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்த முயன்ற கும்பலை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார்.
இவர், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளுடனும், தமிழ் சினிமா பிரபலங்கள் பலருடனும் நெருக்கமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கும், தி.மு.க., பிரமுகர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், சென்னை வழியாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது குறித்தும் விசாரிக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளதாவது:
தமிழகத்தில், நான் வசிக்கும் இடம் போன்ற தொலைதுார கிராமங்களுக்கும் போதைப் பொருள் வந்து விட்டது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். எங்கள் பள்ளி குழந்தைகளை போதையில் இருந்து காப்பாற்ற போராடி வருகிறோம். போதைப்பொருள் கடத்தல் குறித்து அண்ணாமலை பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
இப்பிரச்னையை நாம் உறுதியாக கையாள வேண்டும். சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகள் வலுவான போதைப் பொருள் எதிர்ப்பு கொள்கையை கொண்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

