ADDED : அக் 29, 2024 11:52 PM

சென்னை:சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் அருகே மூலக்கடை பகுதியில் இருந்து மர்ம நபர்கள், இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயற்சி செய்வதாக, என்.சி.பி., என்ற மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவரது தலைமையில் என்.சி.பி., அதிகாரிகள், மாதவரம், மூலக்கடை மற்றும் எம்.கே.பி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மூலக்கடை பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார், 35, சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன், 38, என்பது தெரியவந்தது.
மேலும், விஜயகுமார், கன்னியாகுமரியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போது, அட்டை பெட்டி ஒன்றில், 1.8 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் இருந்ததும், இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் மணிவண்ணன், கொடுங்கையூரில் உள்ள தன் வீட்டில், 900 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இவற்றுடன் சேர்த்து, 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.7 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், 15 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் என்.சி.பி., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.