போதையில் கார் ஓட்டி விபத்து எம்.பி., மகனை துரத்தி பிடித்த மக்கள்
போதையில் கார் ஓட்டி விபத்து எம்.பி., மகனை துரத்தி பிடித்த மக்கள்
ADDED : பிப் 24, 2024 12:53 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு --- மாமல்லபுரம் சாலையில், செங்கல்பட்டு மார்க்கத்தில், 'ஹூண்டாய்' கார் ஒன்று அதிவேகத்தில் சென்றது.
திருக்கழுக்குன்றம் --- செங்கல்பட்டு இடையே, சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து மோதி, நிற்காமல் சென்றது. நல்வாய்ப்பாக, இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் காயமின்றி தப்பினர்.
இதைக் கண்ட சகவாகன ஓட்டிகள், காரை துரத்திச் சென்றனர். செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் இருந்த இரும்புத் தடுப்பு மீது மோதி, கார் நின்றது.
காரில், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் மற்றும் பெண்களைப் பிடித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்த இளைஞர், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கிரிராஜன் மகன் செந்தமிழன் என்பது தெரியவந்தது. செந்தமிழன், பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலையில், சட்டம் படித்து வருவதும், நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று, மதுபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

