தி.மு.க.,வின் ராஜேந்திர சோழன் உதயநிதிக்கு துரைமுருகன் 'ஐஸ்'
தி.மு.க.,வின் ராஜேந்திர சோழன் உதயநிதிக்கு துரைமுருகன் 'ஐஸ்'
ADDED : நவ 09, 2025 12:48 AM
''தி.மு.க.,வை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது,'' என அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் கூறி உள்ளார்.
சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் துரைமுருகன் பேசியதாவது:
ஒரு கட்சி ஆரம்பித்தால், உயிர் நாடியான கொள்கைகளில் சமரசம் கொள்ள மாட்டார்கள். தி.மு.க,வும் அப்படித்தான். கட்சியின் உயிர் நாடிக் கொள்கையான ஹிந்தி எதிர்ப்பு, சுய மரியாதை இவற்றில் ஒரு நாளும் சமரசம் ஏற்படுத்திக் கொண்டதில்லை.
தி.மு.க.,வைத் துவங்கி, 67ல் ஆட்சியை பிடித்து, அதை கருணாநிதி கையில் அண்ணா துரை ஒப்படைத்தார். அவர், தமிழகத்தை மிக அற்புதமாக ஆட்சி செய்தார்.
அவர் மறைவதற்கு முன், ஸ்டாலினை அழைத்து, 'என் பாதையிலேயே கட்சியை நடத்து' என்று சொல்லி, கட்சியை ஒப்படைத்தார். கருணாநிதியுடன் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தவன் நான்.
ஸ்டாலினை அவருடைய இளம்பிராயத்தில் இருந்து அறிந்தவன். வியந்து போற்றி சல்யூட் அடிக்கிற அளவுக்கு, ஸ்டாலின் வளர்ந்து நிற்கிறார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடைய வளர்ச்சி கருணாநிதிக்கான பெருமை. காரணம் -- அவரால் வளர்க்கப்பட்டவர்.
ஸ்டாலினைப் போன்றே, அவருக்கு அடுத்ததாக வளர்ந்து நிற்கும் உதயநிதியும், அவருடைய இடத்துக்கு வருவார். அப்படி வரும்போது, அவர் கருணாநிதி, ஸ்டாலின் பெற்ற புகழைக் காட்டிலும் கூடுதலாகப் பெறுவார்.
இதை எதை வைத்து சொல்கிறேன் என்றால், கருணாநிதி ஒரு காலத்தில் என்னிடம் சொன்னார். 'கட்சி நிர்வாகத்தில் என்னை மிஞ்சக்கூடியவர் ஸ்டாலின்' என்று. இதை வைத்துத்தான், ஸ்டாலினோடு உதயநிதியை பொருத்திப் பார்க்கிறேன்.
தி.மு.க.,வை அழியாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, எல்லோருக்கும் உள்ளது. தி.மு.க.,வுக்கு இருக்கும் எதிர்ப்பு, வேறு எந்த கட்சிக்கும் இல்லை. தமிழைச் சொன்னால் எதிர்ப்பு; தன்மானத்தை சொன்னால் எதிர்ப்பு; சுய மரியாதையை கேட்டால் எதிர்ப்பு, மாநில சுயாட்சியை கேட்டால் எதிர்ப்பு. இப்படி எதைக் கேட்டாலும் எதிர்ப்பை சந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க.,தான். அதை மீறிதான், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கிறோம்.
ராஜராஜ சோழனுக்கு பின் ராஜேந்திர சோழன் தான் என்பதே வரலாறு. ராஜராஜன் மன்னனாக இருக்கிறபோது, அந்தப் பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக் கொண்டு, அதைச் செய்தான். தாய்லாந்து வரை சென்று, தன்னுடைய ஆட்சியை நிறுவினான்.
இன்றைக்குச் சொல்கிறேன்... குறித்து வையுங்கள். ஒருநாள், உதயநிதி தி.மு.க.,வின் ராஜேந்திர சோழனாக மாறுவார். எதை செய்தாலும் உதயநிதி சரியாக செய்வதாலேயே, இதை சொல்கிறேன்.
இனி இந்த இயக்கத்துக்கு அழிவில்லை. கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிற உதயநிதி, இனிமேல் கட்சியை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்.
இவ்வாறு துரைமுருகன் பேசினார்
- நமது நிருபர் -.

