மக்களை குழப்பும் முயற்சியை விடுங்க பழனிசாமிக்கு துரைமுருகன் 'அட்வைஸ்'
மக்களை குழப்பும் முயற்சியை விடுங்க பழனிசாமிக்கு துரைமுருகன் 'அட்வைஸ்'
ADDED : அக் 01, 2024 07:26 PM
சென்னை:'அண்டை மாநில நதி நீர் பிரச்னையில், மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்' என, பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
'முல்லைப் பெரியாறு அணையில், 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணையை பலப்படுத்திய பின், அணையின் நீர் மட்டத்தை, 142 அடியில் இருந்து, 152 அடியாக உயர்த்தலாம் என, 2006 பிப்., 27ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 152 அடியாக உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2022 மார்ச் 3ம் தேதி கேரள நீர்வளத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே உள்ள மரங்களை அகற்ற, விரைவில் அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
கடந்த ஆண்டு மே 5ம் தேதி நடந்த கூட்டத்தை தொடர்ந்து, வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை வனச்சாலையை சரி செய்ய, கேரள அரசு, 31.24 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசு, இத்தொகையை கேரள அரசுக்கு கடந்த அக்., 4ல் செலுத்தியது. தரைப்பாலம் சீரமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழக அரசு, கேரள அரசுக்கு கடிதங்கள், மேற்பார்வை குழு கூட்டங்கள் வழியாக, பேபி அணையின் எஞ்சிய பணிகளை முடிக்க, தேவையான அனுமதி அளிக்க வலியுறுத்தி வருகிறது. மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்து, அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்த வேண்டும். இதற்காக, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.
தி.மு.க., அரசு தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக, எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. அண்டை மாநில நதி நீர் பிரச்னையில், அரசியல் லாபம் கருதி, வெற்று அறிக்கைகளையும், போராட்டங்களையும் அறிவிக்கும் அ.தி.மு.க., மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

