திருவெண்காடு தெப்ப உற்சவம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
திருவெண்காடு தெப்ப உற்சவம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
ADDED : மார் 05, 2024 07:04 AM

மயிலாடுதுறை : திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற இந்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவத்தில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. நவக்கிரகங்கள் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோவிலில் ஆண்டுதோறும் 13 நாட்கள் நடைபெறும் மாசி மாத இந்திர திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 12ம் நாளான நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக திறப்பு விழாவிற்கு நேற்று முன்தினம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் திருவெண்காட்டில் உள்ள அவர்களது வீட்டில் தங்கினர். இந்நிலையில் அன்று இரவு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

