'இ - மெயிலில்' பணியிடமாற்ற கடிதம் தோட்டக்கலை துறையில் சலசலப்பு
'இ - மெயிலில்' பணியிடமாற்ற கடிதம் தோட்டக்கலை துறையில் சலசலப்பு
ADDED : ஜூலை 03, 2026 12:43 AM
சென்னை: தோட்டக்கலை துறையில், இடமாற்றம் செய்யப்பட்ட, துணை இயக்குநர்கள் பட்டியலை வெளியிடாமல், தனித்தனியே இடமாற்றம் செய்யப்பட்டோருக்கு மட்டும், 'இ - மெயில்' வழியே அனுப்பியது, துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டக்கலைத் துறையில், 15 மாவட்ட துணை இயக்குநர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே, 'இ - மெயில்' வழியே அனுப்பப்பட்டுள்ளது. வெளிப்படையாக பட்டியலை வெளியிடாதது, துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்கள் சிலர் கூறியதாவது:
தோட்டக்கலைத்துறையில் ஒன்று அல்லது இரண்டு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது, அவர்களுக்கு மட்டும், 'இ - மெயிலில்' தகவல் அனுப்புவது வழக்கம். குழுவாக இடமாற்றம் செய்யும்போது, அதன் விபரம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, வெளிப்படையாக பட்டியல் வெளியிடப்படும். கடந்த ஆட்சிகளில், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
தற்போதைய த.வெ.க., ஆட்சியில், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்தும் நடக்க வேண்டும் என, ஒவ்வொரு கூட்டத்திலும், முதல்வர் விஜய் கூறி வருகிறார். ஆனால், 15 துணை இயக்குநர்கள் இடமாற்றத்தை, வெளிப்படையாக வெளியிடவில்லை.
சிலருக்கு அலுவலகத்தில் இருந்து, இடமாற்ற தகவல், மொபைல் போன் வழியே தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் பசையான பதவிகளை கேட்டு பெற்றுள்ளனர். இதுகுறித்து விசாரித்தால், பல தகவல் அம்பலமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
