இ-பைலிங் வழக்கு தாக்கலுக்கு இ - சேவை மையம்!: கோவை கோர்ட்களில் துவக்கம்
இ-பைலிங் வழக்கு தாக்கலுக்கு இ - சேவை மையம்!: கோவை கோர்ட்களில் துவக்கம்
ADDED : செப் 28, 2024 05:12 AM
கோவை: இ- பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வதற்கு, கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்ற வளாகங்களில், 14 இலவச சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, இ- கோர்ட் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான வழக்குகளையும், இ- பைலிங் முறையில் தாக்கல் செய்யும் நடைமுறை, பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்தாண்டு செப்., முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இ- பைலிங் வாயிலாக, வழக்கு தாக்கல் செய்யும் முறையை நிறுத்தி வைக்கக் கோரி, வக்கீல் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். வக்கீல்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகே, இப்புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.
இதனால், நேரடி மற்றும் ஆன்லைன் என இரண்டு முறையிலும், வழக்கு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக வழக்கு தாக்கல் செய்வதற்கு உதவியாக, நீதிமன்ற வளாகத்தில், 'இ- பைலிங்' சேவை மையம் அமைக்க ஐகோர்ட் முடிவு செய்தது.
அதன்படி, கோவை மாவட்டத்தில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் ஐந்து ஆன்லைன் சேவை மையமும், பொள்ளாச்சியில் மூன்று மையம், மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, வால்பாறை, காந்திபுரம் கமர்சியல் கோர்ட் ஆகியகோர்ட் வளாகங்களில், தலா ஒரு சேவை மையம் உட்பட, மொத்தம், 14 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தனித்தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா ரிப்பன் வெட்டி, துவக்கி வைத்தார். இதில், வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், வக்கீல் சங்க கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார் மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.
ஆன்லைன் சேவை மையத்தில், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்து கொள்வதோடு, வழக்கு சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணலாம்.