ADDED : ஆக 21, 2025 01:28 AM
சென்னை:அரசு அலுவலகங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின்னணு சாதன கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்பு பிரசாரத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில், 'துாய்மை இந்தியா' இயக்கம், ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காணவும், அலுவலகங்களை 'டிஜிட்டல்' மயமாக்கவும், மத்திய அரசின் சார்பில் சிறப்பு பிரசாரம், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு சிறப்பு பிரசாரம், அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சட்டத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பயன்படுத்தப்படாத பழைய கணினிகள், மின்னணு சாதனங்கள், அவை தொடர்பான உபகரணங்கள் அகற்றப்பட உள்ளன.
அந்த வகையில், உயர் கல்வி நிறுவனங்களும், தங்கள் அலுவலக துாய்மைக்காக, 'இ - வேஸ்ட்' அகற்றுதலில் பங்கேற்க வேண்டும் என, கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.