கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம்; 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு!
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம்; 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு!
ADDED : நவ 27, 2024 09:52 AM

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக, 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை உத்தரவாதம் வழங்கியதால், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை தள்ளுபடி செய்தது.
சென்னையின் முக்கிய சாலையான இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசலை கணக்கில் கொண்டு, திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. வழக்கு, நிர்வாக குளறுபடி காரணமாக ஆமை வேகத்தில் நடந்த பணி, ஓராண்டாக வேகமாக நடக்கிறது. அந்த வகையில், முதற்கட்டமாக, கொட்டிவாக்கம்-பாலவாக்கம் பகுதியில் இருந்து 123 மரங்கள் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக வெட்டி அகற்றப்பட்டன.
தற்போது 2ம் கட்டமாக, 856 மரங்கள் வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை உத்தரவாதம் அளித்தது. இதனை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை தாக்கல் செய்த அறிக்கை: 'இத்திட்டத்தின் முதல்கட்டமாக கொட்டிவாக்கத்தில் இருந்து பாலவாக்கம் இடையே சாலை விரிவாக்கம் செய்வதற்காக 123 மரங்கள் அகற்றப்பட்டன. ஒரு மரம் வெட்டப்பட்டதற்கு 10 மரங்கள் என்ற கணக்கில், மொத்தம் 1,230 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மாநில வனத்துறைக்கு ரூ. 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இரண்டாவது கட்டமாக 758 மரங்களை வெட்டி அகற்றவும், 97 மரங்களை இடம்பெயர்வு செய்து மறு நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெட்டி அகற்றப்படும் 758 மரங்களுக்கு பதிலாக, 7,580 புதிய மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். இதற்கு 3.26 கோடி ரூபாய் தேவை, இதில் வனத்துறைக்கு, 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நடவு செய்யப்பட்ட மரங்களுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சி, பராமரிப்பு செய்து வருகிறோம். 22 மரங்களில் புதிய இலைகள் துளிர்விட்டது. ஏற்கனவே 1,400 மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், வனத்துறையினர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கினர். மேலும் 4,200 மரக்கன்றுகள் நவம்பர் இறுதிக்குள் நடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: நெடுஞ்சாலைத் துறை சுற்றுச்சூழல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலத்தில், சாலை விரிவாக்க பணிக்காக, மகாபலிபுரம் - மரக்காணம் பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மரங்களை வேறு இடத்திற்கு இடம்பெயர்வு செய்தாலும், பராமரிப்பு குறைபாடு காரணமாக, மரக்கன்றுகள் வாடிப்போயின. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.