அன்பில் மகேஷ், முத்துகுமாரை விசாரிக்க ஈ.டி., அதிகாரிகள் திட்டம்
அன்பில் மகேஷ், முத்துகுமாரை விசாரிக்க ஈ.டி., அதிகாரிகள் திட்டம்
ADDED : நவ 26, 2026 10:01 PM
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீதான, 400 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான ஆவணங்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பெற்றுள்ள, ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை அதிகாரிகள், கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், 48, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், 47, மற்றும் தி.மு.க., நிர்வாகி அரசகுமார், 58, உள்ளிட்டோர், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 400 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்துள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, அன்பில் மகேஷ், முத்துக்குமார் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், அன்பில் மகேஷ் அமைச்சராக பொறுப்பேற்ற பின் வாங்கிய சொத்து விபரங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அதேபோல, முத்துகுமார், அரசகுமார் பணப் பரிமாற்றம் செய்த, 49 வங்கி கணக்கு விபரங்களையும் ஆய்வு செய்கின்றனர்.
முறைகேடு தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திரட்டி உள்ள ஆவணங்களின் நகல்களை நேற்று பெற்றுள்ளனர். சென்னை தி.நகரில் செயல்பட்டு வந்த, தனியார் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். அன்பில் மகேஷ், முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர், தற்போது சிறையில் இருப்பதால், அவர்களை மீண்டும் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
