ADDED : நவ 26, 2026 09:09 PM
வேலுார்: வேலுாரில், சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சஜீப், 30, சஜி சிஜன், 32, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காகிதப்பட்டறை தனியார் விடுதியில், வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, வேலுார் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு, நேற்று (நவ.,25) போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தனியார் விடுதி ஒன்றில், வங்கதேசத்தை சேர்ந்த இருவர், உரிய ஆவணங்களின்றி தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், வங்கதேசம் டாக்காவை சேர்ந்த சஜீப், சஜி சிஜன் சகோதரர்கள் என, தெரியவந்தது.
மேலும், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவர்களது உறவினர்களுடன், இந்தியாவை சுற்றி பார்க்க இருவரும் வந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மாவட்டம், ஆத்துாரில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.
