ADDED : நவ 24, 2024 02:31 AM
சென்னை: தி.மு.க., -- எம்.பி., ஆ.ராஜாவுக்கு எதிரான வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணைக்கு தடை கோரிய மனுவுக்கு, அமலாக்கத்துறை பதில் அளிக்க, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி.,யுமான ராஜாவுக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, கடந்த 2015ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் ராஜா, அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் 'கோவை ஷெல்டர் புரமோட்டர்ஸ் இந்தியா' மற்றும் 'மங்கள் டெக்பார்க்' நிறுவனங்களுக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவை ஷெல்டர் புரமோட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் விசாரணை முடியவில்லை; கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதுவரை, குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட எந்த விசாரணையும் நடத்தக்கூடாது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு, அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

