துரைமுருகன், மகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் ஈ.டி., சோதனை
துரைமுருகன், மகன் வீடு உட்பட ஐந்து இடங்களில் ஈ.டி., சோதனை
ADDED : ஜன 04, 2025 12:37 AM

வேலுார்:வேலுாரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் எம்.பி., கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க., பொதுச்செயலர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த், 2019ல் வேலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது, காட்பாடி காந்தி நகரில் உள்ள அவர்களின் வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பள்ளியில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து, 10 லட்சம் ரூபாய், சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயா வீடு, இவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கு, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தாமோதரன் வீடு, வஞ்சூர், செங்கோட்டை, கோட்டநத்தம் ஆகிய இடங்களில் உள்ள தி.மு.க., பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் சிமென்ட் கிடங்கில் இருந்து, 11.51 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த ரூபாய் நோட்டு கட்டுகளில் ஊர் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் ஆகியோருக்கு சொந்தமான வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லுாரி, துரைமுருகனுக்கு சொந்தமான பி.எட்., கல்லுாரி.
முன்னாள் நகர செயலரும், வேலுார் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைப்பாள ருமான பூஞ்சோலை சீனிவாசனின் பள்ளிக்குப்பம் கிராமத்தில் உள்ள வீடு, அவரது சகோதரி விஜயாவுக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கு போன்ற இடங்களில், 30க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்த வந்தனர்.
கதிர் ஆனந்த், துபாய் சென்றுள்ளதாலும், அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்ததாலும் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அதிகாரிகள் காலை, 7:00 முதல், மதியம், 2:18 மணி வரை வீட்டின் வெளியே காத்திருந்தனர்.
அப்போது, கதிர் ஆனந்த், இ - மெயிலில் வேலுார் மாநகராட்சி துணை மேயரான சுனில் குமார், காட்பாடி வடக்கு தி.மு.க., செயலர் வன்னிராஜா முன்னிலையில் சோதனை நடத்த அனுமதி அளித்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கினர். தி.மு.க., நிர்வாகிகள், அமைச்சர் துரைமுருகன் வீடு முன் குவியத்தொடங்கினர்.
சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி சோதனை நடத்தி வரும் நிலையில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் காலை, 7:00 மணிக்கு தொடங்கிய சோதனை, மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இங்கும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.