ஈ.டி., சோதனை நடக்கவில்லை கட்டுமான நிறுவனம் விளக்கம்
ஈ.டி., சோதனை நடக்கவில்லை கட்டுமான நிறுவனம் விளக்கம்
ADDED : மார் 04, 2024 04:59 AM
சென்னை : 'நவீன் கட்டுமான நிறுவன இயக்குனர் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை' என, அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நவீன் ஹவுசிங் அண்டு பிராப்பர்டீஸ் கட்டுமான நிறுவன இயக்குனர் நவீன் என்ற விஸ்வஜித் குமார் வீட்டில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், துளியளவும் உண்மை இல்லை.
எங்கள் நிறுவன இயக்குனர் வீட்டிலோ, அலுவலகத்திலோ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை. எங்கள் இயக்குனரும் திருவான்மியூரில் வசிக்கவில்லை.
சோதனை நடந்ததாகக் கூறப்பட்ட நாளில், எங்கள் இயக்குனர், மனைவி மற்றும் மகன்களுடன் சென்னை சேத்துப்பட்டு பகுதியிலுள்ள, தனியார் குழந்தைகள் நல டாக்டரை சந்திக்கச் சென்றார். மதியம் முதல் அலுவலகத்தில் தான் இருந்தார்.
எங்களின் 34 ஆண்டு கால பயணத்தில், வலுவான நம்பகத்தன்மையை உருவாக்கி உள்ளோம். நாங்கள் எந்த விதமான சட்ட விரோத வணிக நடவடிக்கையிலும் ஈடுபடுவது இல்லை.
எங்கள் நெறிமுறை, வணிக நடைமுறைகள், கட்டுமான தரம், சரியான நேரத்தில் வினியோகம் என, எங்கள் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், ஆலோசகர்கள், பணியாளர்களிடம் ஆரோக்கியமான நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
எங்கள் நிறுவனம் தொடர்பாக வெளி வந்துள்ள மற்றும் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

