வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு
வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு
ADDED : ஆக 17, 2025 01:31 AM

வேலுார்:“வரும் 2047ல், இந்தியா வளர்ந்த நாடாக மாற, கல்வி வளர்ச்சி முக்கியமானது,” என, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலையின், 40வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மஹாதேவன் சிறப்பு விருந்தினராகவும், 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழின் தலைமை செயல் அலுவலர் சிவகுமார் சுந்தரம், கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நவீன தொழில்நுட்பம் விழாவில், 8,310 பேருக்கு இளநிலை பட்டம், 2,802 பேருக்கு முதுநிலை பட்டம், 451 பேருக்கு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தங்க பதக்கங்கள் வழங்கப் பட்டன.
தமிழக காவல் துறை பயிற்சி இயக்குநரகத்தின் இயக்குநர் டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர், 'பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை' என்ற பாடத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.
மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, நீதிபதி மஹாதேவன் வாழ்த்தி பேசியதாவது:
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிர்வாக செயல்பாடுகளில், வி.ஐ.டி., பல்கலை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. கடந்த 20 ஆண்டுகளில், இந்திய பொருளாதார சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிக்கிறது.
உலகமயமாக்கல் வாயிலாக தொழில்நுட்பங்கள், முதலீடு ஆகியவற்றால், வேலை வாய்ப்பு, உயர் கல்வி வாய்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதை மாணவர்கள் பயன்படுத்தி, தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதிர்கால தலைவர்களாக மாற உள்ள மாணவர்கள், ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி., வேந்தர் விஸ்வ நாதன் பேசியதாவது:
இந்தியாவில் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. தற்போது, 3 சதவீதம் தொகை மட்டுமே செலவு செய்யப்படுகிறது.
தமிழகம், 21 சதவீதம் நிதியை ஒதுக்கி, கல்வித் துறையில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. மத்திய பட்ஜெட் தொகையான, 55 லட்சம் கோடி ரூபாயில், 2.5 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உயர் கல்வியில், 4.3 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையில், உயர் கல்வி மாணவர் சேர்க்கையை, 50 சதவீதமாக எட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதை அடைய, உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை, எட்டு கோடியாக உயர்த்த வேண்டும். இதற்காக, அதிக வகுப்பறைகள், உள்கட்டமைப்புக்கு நிதி தேவைப்படும்.
இந்தியாவில் கருப்பு பணம், வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் ஆகியவை, தேசிய நோய்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சம் கோடி ரூபாயை, வரி ஏய்ப்பால் இழந்து வருகிறோம். ஊழலால், 6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
வெளிநாடுகளில், குறிப்பாக சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்பு பணம், உலக நாடுகளின் மொத்த பணத்தை விட அதிகம். கருப்பு பணம், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றை அகற்ற, மாணவர் சமுதாயம் போராட வேண்டும்.
நிதி ஒதுக்கீடு வரும், 2047ம் ஆண்டுக்குள், இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு கல்வியின் வளர்ச்சி முக்கியம். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வி.ஐ.டி., பல்கலை துணை தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி.
உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன், துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.