ADDED : டிச 16, 2024 12:42 AM

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான, மறைந்த இளங்கோவனின் உடல், சென்னையில் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழக காங்., முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன், 75, உடல் நலக்குறைவு காரணமாக, சில நாட்களுக்கு முன், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, மணப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இளங்கோவன் மனைவி வரலட்சுமி, அவரது மகன் சஞ்சய் சம்பத் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், பொதுச்செயலர் யுவராஜா உட்பட ஏராளமானோரும் அஞ்சலி செலுத்தினர்.
இளங்கோவனின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
நேற்று மாலை இளங்கோவன் உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, ஊர்வலமாக முகலிவாக்கம் எல்.என்.டி., காலனியில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடந்தது.