ADDED : அக் 02, 2024 01:16 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லுாரி களில், முதியோர் பராமரிப்பு உதவியாளர் படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.
தேசிய முதியோர் தினத்தை முன்னிட்டு, 36 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதியோர் பராமரிப்புக்கான, மூன்று மாத உதவியாளர் படிப்பை, கிண்டி முதியோர் நல மருத்துவமனையில், அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
நாட்டில், 14.9 கோடி முதியோர் உள்ளனர். அதில், 13.7 சதவீத முதியோர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களை பராமரிப்பதில் பலருக்கும் சிரமம் உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையிலும், 10ம் வகுப்பு படித்தோருக்கு சுயதொழில் வாய்ப்பளிக்கவும், இந்த படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில், 975 பேர் சேர்ந்துள்ளனர்.
அவர்களின் விபரங்கள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ளன. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லுாரிகளில், 'டீன்' இல்லை. தற்போது, 26 மருத்துவர்களின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. விரைவில், 'டீன்'கள் நியமனம் செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.