மதிமுக.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
மதிமுக.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
UPDATED : மார் 27, 2024 12:29 PM
ADDED : மார் 27, 2024 10:26 AM

சென்னை: லோக்சபா தேர்தலில், மதிமுக.,வுக்கு 'பம்பரம்' சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பிற்பகலில் நடைபெறும் வழக்கு விசாரணையின்போது முறையிடுவோம் என திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், லோக்சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர்.
பம்பரம் சின்னம் பொதுவான சின்னங்கள் பட்டியலில் உள்ளதா என கோர்ட் கேள்வி எழுப்பியது. அப்போது பம்பரம் சின்னம் பொதுச்சின்னமாக வகைப்படுத்தப்படவில்லை என்றும், ம.தி.மு.க., விண்ணப்பத்தின் மீது இன்று (மார்ச் 27) காலை முடிவெடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதிமுக.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் நடக்க இருக்கிறது. அப்போது சின்னம் கேட்டு முறையிடுவோம் என திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
துரை வைகோ பேட்டி
மேலும் துரை வைகோ கூறியதாவது: தேர்தல் ஆணையம் தான் ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. இன்று பிற்பகல் நீதிமன்றம் விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே, தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும் லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சின்னத்தை ரிலீஸ் செய்து மதிமுகவுக்கு வழங்குவது முன் உதாரணமாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. தேர்தல் விதிமுறைகள் படி சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால் அந்த சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று எங்கள் தரப்பு வக்கீல் கேட்க உள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கிறோம். கடந்த காலங்களை போல் இல்லாமல் இப்போது இல்லை; வேட்பாளரையும் சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் உள்ளது. எனவே 24 மணி நேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.
இது தவிர, பா.ஜ., கட்சியை எதிர்க்கும் அணியாக தி.மு.க.,வை மக்கள் பார்க்கின்றனர். எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க.,வையும் அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள். உங்கள் ஆணையம் புதிது புதிதாக காரணங்களை சொல்லி சின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுகின்றனர். எங்களுக்கு மட்டுமல்ல நாம் தமிழர் கட்சி போன்றவர்களுக்கும் இதே நிலை தான். இவ்வாறு அவர் கூறினார்.

