ADDED : ஏப் 11, 2026 06:38 AM

அ .தி.மு.க., சார்பில் கடந்த மார்ச் 24ல் வெளியான தேர்தல் அறிக்கையில், வீட்டுக்கு ஒரு 'பிரிஜ்' அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பது உட்பட, 297 வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன.
தி.மு.க., மார்ச் 29ல் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'வாஷிங் மிஷின், மிக்ஸி, பிரிஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, இல்லத்தரசிகளுக்கு, 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்பது உட்பட 498 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
தமிழக பா.ஜ.,வில், தேர்தல் அறிக்கை தயாரிக்க, முன்னாள் கவர்னர் தமிழிசை தலைமையில், 12 பேர் அடங்கிய குழு, கடந்த ஜன., 18ல் அமைக்கப்பட்டது.
இக்குழு, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை, மாநிலத் தலைமையிடம் அளித்தது. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி கூட தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டது.
பா.ஜ., இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வெளிவரும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
