தி.மு.க.,வில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு...
தி.மு.க.,வில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு...
UPDATED : ஜன 17, 2024 12:52 AM
ADDED : ஜன 15, 2024 11:09 PM

''தி.மு.க., வில் கூட்டணி முடிவு இப்போதைக்கில்லை. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்த முடிவு எடுப்போம். அனைவரும் எங்களுடன் இருப்பர் என நம்புவோம்,'' என, தி.மு.க., பொதுச்செயலரும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அதிரடியாக நேற்று அறிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே., உட்பட, ஒன்பது கட்சிகள் இடம் பெற்றிருந்தன.தி.மு.க., கூட்டணியில் இந்த முறை, ஐ.ஜே.கே., கட்சி மட்டும் வெளியேறுவது உறுதியாக உள்ளது. தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட, ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், பா.ஜ.,வுடன் நெருக்கமாக உள்ளார்.
டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக முன்னணி கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இதனால், ஐ.ஜே.கே., கட்சி, பா.ஜ., கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவது குறித்து துவக்கிய கூட்டணி பேச்சும், அக்கட்சிகளின் மத்தியில் நீடித்து வருகிறது. இன்னும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை.
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., உள்ளே வந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்ற சந்தேகமும், தி.மு.க., மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் கட்சியும், புதிய வரவாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பொங்கலுக்குப் பின், தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு துவக்குவோம்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர் டி.ராஜா அறிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பியதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தலாம் என, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம், காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடித்த பின், இறுதியில் பேச்சு நடத்த, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலினும், துணை பொதுச்செயலர் கனிமொழியும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சேலத்தில் வரும் 21ம்தேதி நடக்கவுள்ள, தி.மு.க., இளைஞரணி மாநில மாநாட்டில் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேலுார் மாவட்டம், காட்பாடியில், பொங்கல் விழா ஒட்டி, தி.மு.க., தொண்டர்களுக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்த பின், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, இப்போதும் சரி... தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருக்கிறார்.தீர்ப்பாயம் அமைப்பதையும், அதை அரசிதழில் போடுவதையும் எதிர்த்தார். மோடியால் மட்டுமே காவிரி பிரச்னையை தீர்க்க முடியும் என, அவர் கூறுகிறார்.
அப்படி கூறினால் தான், தேவகவுடா மகன், அரசியல் நடத்த முடியும் என்பதால் கூறுகிறார்.
அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் அவர் கையை பிடித்தா வைத்துள்ளோம்?நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க., சந்திக்கும். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போது இருப்பவர்கள், எங்களுடன் இருப்பர் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துரைமுருகன் இப்படி கூறியுள்ளதை அடுத்து, தொகுதிப் பங்கீடு விவகாரத்தில், அவசரப்பட்டு வார்த்தை விடாமல், யாரையும் பகைக்காமல் காய் நகர்த்தவும், காங்கிரசுக்கு சீட் ஒதுக்கும் விவகாரத்தில், மற்ற மாநில நகர்வுகளையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்யலாம் என தி.மு.க., முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. -நமது நிருபர்-