எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்; சொல்கிறார் ஸ்டாலின்
ADDED : ஜூன் 28, 2026 08:35 PM

சென்னை: '' எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். 100 சதவீதம் நாம் தயாராக இருக்க வேண்டும்,'' என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்பட மாற்றுக்கட்சியினர் பலர் திமுகவில் இணையும் விழா சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
எம்ஜிஆர்
எம்ஜிஆர் முதன் முதலில் உதயசூரியன் சி ன்னத்தில் போட்டியிட்டு தான் எம்எல்ஏ ஆனார். பிறகு, தனிக்கட்சி துவக்கினார். அதன் பிறகும், சட்டசபையில் ஒருவர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசினார். அப்போது அதனை எம்ஜிஆர் கண்டித்தார். 'உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம். எனக்கு தலைவர் கருணாநிதி என்று சொல்லி, அந்த வார்த்தையை வாபஸ்வாங்க சொன்னார்.
கொள்கை
தேர்தல் முடிந்த பிறகு, வெற்றி பெற்ற கட்சியில் பலர் சேர்வார்கள். எதிர்க்கட்சியில் இருந்து விலகி ஆளுங்கட்சியில் சேர்வார்கள். ஆனால், எதிர்க்கட்சியான திமுகவில் நீங்கள் இணைந்துள்ளீர்கள். பதவிக்காக, பொறுப்புக்காக, பவிசுக்காக அல்ல கொள்கைக்காக திமுகவில் இணைந்துள்ளீர்கள். இது பாராட்டப்பட வேண்டியது. பெருமைப்பட வேண்டிய விஷயம். திமுக வலிமையாக இருந்தால் தான் தமிழகத்தை காக்க முடியும் என நம்பி திமுகவில் இணைந்துள்ளீர்கள்.
பயம்
கடந்த 5 ஆண்டுகளில் இதுவரையில் தமிழகம் கண்டிராத வளர்ச்சியை தமிழகம் பார்த்தது. தினமும் ஒரு திட்டம் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. ஆட்சி மீது இருந்த நம்பிக்கையினால் தான் உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வந்தது. ஆனால், இப்போது ஆட்சி மாற்றம் நடந்தது. இந்த ஒரு மாதத்திலேயே தமிழகம் அதளபாதாளத்திற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. தொழில் நிறுவனங்கள் பிற மாநிலங்களுக்கு சென்று விட்டது. தொழில் நிறுவனங்கள் இந்த ஆட்சியை நம்பி வரப் பயப்படுகிறார்கள்.
பிரச்னை
சட்டம் ஒழுங்கு பற்றி சொல்லத்தேவையில்லை. போதைப்பொருள் நடமாட்டம் பாலியல் கொடுமை, பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டுகள், கொள்ளைகள், அராஜகம் நடக்கிறது. டிவியில் செய்தியில் இதுதான் கண்ணில் படுகிறது. குறிப்பாக நிறைய குற்றங்களில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுதான் வேதனை. இன்னொருபக்கம் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் . பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
திசை திருப்பல்
ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், 'டேக் டைவர்சன்' என திசைதிருப்பும் வேலை இந்த ஆட்சி நடக்கிறது. இந்த டெக்னிக் மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது. மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். ஓட்டுப் போட்டவர்களும் கஷ்டப்படுகின்றனர்.ஓட்டுப் போடாதவர்களும் கஷ்டப்படுகின்றனர்.
அமைச்சர்கள் காரில் செல்லும் போது மறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழலில் மக்களுக்கு துணையாக நாம் தான் இருக்க வேண்டும். தமிழகத்தை காக்கும் பொறுப்பும், கடமையும் திமுகவுக்கு தான் உள்ளது. தமிழகத்தை சீரழிய விடக்கூடாது.
முடியாது
ஏதோ ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழப்பது பெரிய வீழ்ச்சி இல்லை. எத்தனையோ வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறோம். திமுக போன்று வெற்றியையும், தோல்வியையும் பார்த்த கட்சி கிடையாது. இரண்டிலும் நமக்கு தான் பெருமை. திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது. வீழ்த்த முடியாது.
இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. திமுக வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும் என தமிழக மக்கள் ஓட்டளித்த நமது கூட்டணி கட்சிகளின் தயவால்தான் இந்த ஆட்சி ஓடுகிறது. ஓடுகிற வண்டி எங்கு போய் நிற்கும் எனத் தெரியவில்லை . எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். 100 சதவீதம் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
