தான் பரிந்துரைத்த கடிதங்கள் குப்பையில் மின் வாரிய தலைவர் 'டென்ஷன்'
தான் பரிந்துரைத்த கடிதங்கள் குப்பையில் மின் வாரிய தலைவர் 'டென்ஷன்'
ADDED : ஆக 02, 2025 10:01 PM
தன்னை சந்தித்து குறைகளை தெரிவிப்பவர்களின் மனுக்கள், குப்பையில் போடப்பட்டதால், கோபம் அடைந்த மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், தன் குறிப்புகளுடன் கூடிய மனுக்களை தனி பதிவேட்டில் பதிவு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மின் உற்பத்தி கழகம், மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், பசுமை எரிசக்தி கழகம் ஆகிய நிறுவனங்களாக, மின் வாரியம் செயல்படுகிறது. அவற்றின் கீழ், 90,000 பேர் பணிபுரிகின்றனர்.
மின் இணைப்பு வழங்க தாமதம் உள்ளிட்ட, மின்சார சேவைகளால் பாதிக்கப்படும் மக்களும், வாரிசு வேலை போன்றவை கேட்டு வரும் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும், மின் வாரிய தலைவராக உள்ள ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளிக்கின்றனர்.
அவர், வார நாட்களில் தினமும் மக்களையும், செவ்வாய் கிழமைகளில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளையும் சந்தித்து, மனுக்களை பெறுகிறார்.
அம்மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு, அதில் தன் கையால் குறிப்பு எழுதி நிர்வாகம், செயலகம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு அனுப்புகிறார்.
அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.
வாரிய தலைவரை பார்த்து நேரடியாக வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், தங்களுக்கு ஆதாயம் இல்லை என்பதால், மனுக்கள் மீது சிலர் வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பதில்லை.
சிலர் வேண்டுமென்றே மனுக்களை தொலைத்தும் விடுகின்றனர். இதுதொடர்பாக, ராதாகிருஷ்ணனுக்கு புகார்கள் சென்றன. கோபம் அடைந்த அவர், அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
அதன் விபரம்:
மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும், வாரிய தலைவரால் குறிக்கப்பட்ட தபால் மற்றும் கடிதங்களை கவனமாக படித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வண்டும்
இதை செயலக அதிகாரிகள் தனி பதி வேட்டில் பதிவு செய்ய வேண்டும். இது, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஆய்வு செய்யப்படும்
மனு வரிசை எண், எந்த நாளில் பெறப்பட்டது, யார் பெற்றது, குறிப்பு உள்ளிட்ட விபரங் களையும் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.