சாம்பல் கழிவுகள் அகற்றுவதில் தாமதம் மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சாம்பல் கழிவுகள் அகற்றுவதில் தாமதம் மின் வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : பிப் 02, 2024 11:19 PM
சென்னை:'சென்னை அருகே அத்திப்பட்டில் உள்ள, வட சென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல் கழிவுகள், பகிங்ஹாம் கால்வாயிலும், கொசஸ்தலையாற்றிலும் கொட்டப்படுகின்றன.
'சுற்றுச்சூழலை பாதுகாக்க சாம்பலை அகற்ற உத்தரவிட வேண்டும்' என சென்னையை சேர்ந்த ரவிமாறன் என்பவர், 2016ல் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'சாம்பல் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற, 2022 ஜூன் மாதத்திற்குள் குழாய்கள் அமைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
அவகாசம் வேண்டும்
'குழாய்கள் அமைப்பதற்கு பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, டெண்டரை இறுதி செய்ய வேண்டியிருப்பதால், அவகாசம் வேண்டும்' என, தமிழக மின்வாரியம் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
சாம்பல் கழிவுகளை அகற்ற குழாய்கள் அமைப்பதில் வேண்டுமென்றே தாமதம் செய்யவில்லை என்றும், மின் வாரியத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் தான் தாமதம் ஏற்பட்டது என, மின்வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், தீர்ப்பாயம் விதித்த காலக்கெடுவான 2022 ஜூன் மாதத்திற்குள் குழாய்கள் அமைக்கும் பணியை முடிப்பதற்கான முயற்சிகளை மின் வாரியம் எடுக்கவில்லை.
துரதிருஷ்டவசமானது
தீர்ப்பாயத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாவிட்டால் அதன் நோக்கமே தோற்கடிக்கப்பட்டு விடும். புதிதாக டெண்டர் விட்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மின்வாரியத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்தது துரதிருஷ்டவசமானது. எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் மேலும் மேலும் தாமதம் செய்வதை ஏற்க முடியாது.
இதற்காக சுற்றுச்சூழல், வனத்துறைக்கு, மின் வாரியம் 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். புதிய காலக்கெடுவை முடிவு செய்து அதற்குள் பணிகளை, மின் வாரியம் முடிக்க வேண்டும். புதிய காலக்கெடுவை மின் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

