ஆகஸ்டில் எகிறியது மின் தேவை அலறும் மின் வாரிய அதிகாரிகள்
ஆகஸ்டில் எகிறியது மின் தேவை அலறும் மின் வாரிய அதிகாரிகள்
ADDED : ஆக 22, 2025 11:38 PM
சென்னை:சென்னை உட்பட பல மாவட்டங்களில், வெயில் சுட்டெரிப்பதால், தற்போது, தமிழக மின் தேவை, 19,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
வழக்கமாக ஏப்., மே மாதங்களில், வெயில் காரணமாகவும், ஜூன், ஜூலையில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பாலும், தினசரி மின் தேவை, 19,000 - 20,000 மெகா வாட்டாக இருக்கும். ஆகஸ்டில் மின் தேவை குறையும்.
இம்மாதம் துவக்கத்தில் இருந்தே, வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக, வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், நேற்று முன்தினம் மின் தேவை, 19,000 மெகா வாட்டாக அதிகரித்தது. எனவே, மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு நெருக்கடி உருவானது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது, வெயில் கடுமையாக உள்ளதால், வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு, கோடை காலத்தில் இருப்பது போல் உள்ளது.
இதனால் மின் தேவை, 19,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. ஆகஸ்டில், இந்த அளவு மின் தேவை அதிகரிப்பது, இதுவே முதல் முறை. மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

