45 நாட்களுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமித்து கொள்ளலாம்; மின் வாரியம் உத்தரவு
45 நாட்களுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமித்து கொள்ளலாம்; மின் வாரியம் உத்தரவு
ADDED : மே 29, 2026 09:20 PM

சென்னை: மின் சாதனங்களின் பழுதுகளை, விரைவாக சரி செய்ய, ஜூன், 2ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை, 45 நாட்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்து கொள்ள, பிரிவு அலுவலகங்களுக்கு, மின் வாரியம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், 2,850 பிரிவு அலுவலகங்களுடன் செயல்படுகிறது. அவற்றின் வாயிலாகவே, புதிய மின் இணைப்பு வழங்குவது, மின் சாதன பழுதை சரி செய்வது உள்ளிட்ட, மின் வினியோகப் பணிகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு அலுவலகத்திலும், 20 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது, பாதி பேர் கூட இல்லை. இதனால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, மின் சாதன பழுதால், மின் தடை ஏற்படும்போது, விரைவாக சரி செய்ய, பிரிவு அலுவலகங்களில், ஜூன் 1ம் தேதி முதல், ஜூலை 16ம் தேதி வரை, 45 நாட்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்து கொள்ள,மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம் மண்டலங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு, தலா 10 பேர்; நீலகிரி, சேலம் ஏற்காடு, திண்டுக்கல் கொடைக்கானல், ஈரோடு தாளவாடி ஆகிய மலைப் பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் தலா எட்டு பேர்; மற்ற அனைத்து அலுவலகங்களிலும் தலா ஆறு பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே, இதே பணிக்காக, அதே எண்ணிக்கையில், இம்மாதம் 31ம் தேதி வரை தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
