நவம்பரில் அதிகரிக்கும் மின் தேவை பூர்த்தி செய்ய முடியாமல் மின் வாரியம் திணறல்
நவம்பரில் அதிகரிக்கும் மின் தேவை பூர்த்தி செய்ய முடியாமல் மின் வாரியம் திணறல்
ADDED : நவ 06, 2025 12:24 AM
சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்கியும், இம்மாதம் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மின் தேவை 18,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது; அதை பூர்த்தி செய்ய முடியாத வகையில், மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக 16,000 மெகா வாட்டாக உள்ளது. இது, கோடைக் காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, 2024 மே 2ல் மின் தேவை, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இந்த ஆண்டு கோடையில் மழை பெய்தது.
இதனால், மின் தேவை உச்சத்தை எட்டவில்லை. அக்., இறுதியில் வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்குவதால், வீடுகளில் 'ஏசி' பயன்பாடு குறையும். அதற்கு ஏற்ப, தமிழக மின் தேவை வழக்கத்தை விட குறையும்.
அதன்படி, 2024 நவ., 1ல், 12,500 மெகா வாட், 2ல், 13,530 மெகா வாட், 3ல், 13,160 மெகா வாட், 4ல், 15,465 மெகா வாட் என்றளவில் குறைந்தது. கடந்த மாத இறுதியில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், இம்மாதம் 1ம் தேதி முதல் வெயில் சுட்டெரிக்கிறது.
இதனால் மின் தேவை குறையாமல், 1ம் தேதி, 17,380 மெகா வாட், 2ம் தேதி, 15,470 மெகா வாட், 3ம் தேதி, 17,000 மெகா வாட், 4ம் தேதி, 18,000 மெகா வாட்டாக அதிகரித்து வருகிறது. இதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மே மாதம் துவங்கிய காற்றாலை மின் உற்பத்தி சீசன், கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. அந்த காலத்தில், தினமும் சராசரியாக 3,500 மெகா வாட் மின்சாரம் கிடைத்த நிலையில், தற்போது பாதி கூட கிடைப்பதில்லை.
நவ., டிசம்பரில் மழை சீசனால், மின் தேவை குறையும். இதனால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி, 1,750 - 2,000 மெகா வாட்டாக குறைக்கப்படும்.
இந்த முறை எப்போதும் இல்லாத வகையில், நவம்பரில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், மின் தேவை குறையவில்லை. எனவே, 3,000 மெகா வாட் வரை அனல் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

