மின்சார புகார் தெரிவிக்கும் வசதி: விளம்பரப்படுத்த ஆணையம் கடிதம்
மின்சார புகார் தெரிவிக்கும் வசதி: விளம்பரப்படுத்த ஆணையம் கடிதம்
ADDED : ஜன 04, 2025 09:07 PM
சென்னை:மின்தடை உள்ளிட்ட மின்சார புகார்களை தெரிவிக்கும் வசதி தொடர்பாக, மின் நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மின்தடை, கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட மின்சார புகார்களை, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவும், அதன் இணையதளம் மற்றும் மின்னகம் சேவை மைய மொபைல் போன் எண்களிலும் தெரிவிக்கலாம்.
அங்கு தீர்வு கிடைக்கவில்லை எனில், மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளிக்கலாம். இது, தலைவர், இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.
அதில் தீர்வு கிடைக்கவில்லை எனில், மின்சார ஒழுங்குமுறை ஆணைய மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். தற்போது, மின்சார சேவைகளால் பாதிக்கப்படுவோர் நேரடியாக மின் குறைதீர் மன்றம், குறை தீர்ப்பாளரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த மாதம், 18ம் தேதி, 'ஆன்லைன்' வாயிலாக, அனைத்து மாவட்ட மின் குறைதீர் மன்ற நிர்வாகிகளுடன், ஆணையம் கூட்டம் நடத்தியது.
அதில், மின் தடை, குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் உள்ளிட்ட மின்சார புகார்கள், குறைதீர் மன்றத்திற்கு வருவதாகவும், அதனால், மன்றத்திற்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, மின் வாரியம் தன் இணையதளத்தில் மின்சார புகார் தெரிவிக்கும் வசதி தொடர்பாக, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே காரணம்.
எனவே, குறைதீர் மன்றத்திற்கு நேரடியாக சிறு, சிறு புகார்கள் வருவதை தடுக்க, புகார் தெரிவிக்கும் வசதி தொடர்பாக இணையதளத்தின் முகப்பிலேயே விளம்பரம் செய்யுமாறு, மின் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

