கோவில் இடத்தில் குடியிருப்போருக்கு மின் இணைப்பு வழங்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
கோவில் இடத்தில் குடியிருப்போருக்கு மின் இணைப்பு வழங்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
ADDED : ஏப் 22, 2025 11:40 PM
சென்னை:''கோவில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
காங்., - ஹசன் மவுலானா: மேய்க்கால் புறம்போக்கு, கிராம நத்தம், கோவில் நிலம் என்று கூறி, சென்னையில் வேளச்சேரி தொகுதி மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, மின் இணைப்பு மறுக்கப்படுகிறது. 'ஜெனரேட்டர்' வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு அதிக செலவு பிடிப்பதால், சிலர், 'கொக்கி' போட்டு மின்சாரம் எடுக்கின்றனர். அதைக் கண்டுபிடித்து, அபராதம் விதிக்கின்றனர்.
மின் இணைப்பு கொடுக்காவிட்டால், மீண்டும் மீண்டும் தவறு செய்யவே வழிவகுக்கும். மக்கள் தவறு செய்ய அரசே காரணமாக இருக்கக்கூடாது. எனவே, அவர்களுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: ஹிந்து சமய அறநிலையத் துறையின் இடங்களில் வசிப்பவர்களுக்கு, மின் இணைப்பு கிடைக்க வேண்டுமானால், அவர்கள் கோவில் வாடகைதாரர்களாக இருந்து, வாடகை நிலுவை இல்லாமல் இருக்க வேண்டும்.
கோவில் சொத்துகள் அனைத்தும், 'மைனர் சொத்து' என்ற வகையில் வருகிறது. மைனர் சொத்தில் இருப்பவர்களின் பெயரில், மின் இணைப்பு பெற முடியாது. கோவில் பெயரில் தான் பெற முடியும். கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள், மின் இணைப்பு பெற வேண்டுமானால், அவர்கள் வாடகைதாரர்களாக மாற வேண்டும்.
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டே மின் இணைப்பு வழங்க முடியும்.
வனப்பகுதிகள், நீர்நிலைகள், மேய்க்கால் புறம்போக்கில் குடியிருப்பவர்கள், தங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த நான்காண்டுகளில், 27 லட்சம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், மூன்று நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.