உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ.1,618 கோடியை வசூலியுங்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரூ.1,618 கோடியை வசூலியுங்கள் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
ADDED : ஏப் 04, 2025 01:29 AM
சென்னை:உள்ளாட்சி அமைப்புகள், கடந்த 2023 மார்ச் நிலவரப்படி செலுத்த வேண்டிய, 137 கோடி ரூபாய் தாமத கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மின் வாரிய கோரிக்கையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிராகரித்துள்ளது.
அதை சேர்த்து, 1,618 கோடி ரூபாய் மொத்த நிலுவை கட்டணத்தை முழுதுமாக வசூலிக்குமாறு, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் மின் பயன்பாடு கணக்கு எடுத்த நாளில் இருந்து, 20 தினங்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். தாமத கட்டணத்துடன் சேர்த்து, மின் கட்டணம் செலுத்தியதும் மின்சாரம் வழங்கப்படும்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு போன்ற சேவைகளை செய்கின்றன.
இதனால், மின் பயன்பாடு கணக்கு எடுத்த தேதியில் இருந்து மின் கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், அவை குறித்த காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதில்லை. அதற்காக மின் வினியோகம் துண்டிக்கப்படுவதும் இல்லை.
கடந்த 2023 மார்ச் 31 நிலவரப்படி, 1,481.41 கோடி ரூபாய் மின் கட்டணம் மற்றும் அதற்கு தாமத கட்டணம், 137.13 கோடி ரூபாய் என, மொத்தம், 1,618.54 கோடி ரூபாயை மின் வாரியத்திற்கு செலுத்தாமல் உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ளன. தாமத கட்டணத்தை தள்ளுபடி செய்ய வலியுறுத்தின.
அதன் அடிப்படையில், தாமத கட்டணத்தை தள்ளுபடி செய்ய கோரிய மனுவை ஆணையத்திடம், மின் வாரியம் தாக்கல் செய்தது. இதை விசாரித்த ஆணையம், தாமத கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது. தாமத கட்டணம் சேர்த்து, 1,618 கோடி ரூபாய் நிலுவையையும் வசூலிக்குமாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய நிதி பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீடுகளுக்கு தாமத கட்டணம் மாதத்திற்கு, 1.50 சதவீதம் வசூலிக்கப்படும் நிலையில், உள்ளாட்சிகளுக்கு, 0.5 சதவீதம் தான் வசூலிக்கப்படுகிறது உள்ளிட்ட காரணங்களை கூறி, ஆணையம் நிராகரித்து விட்டது.
மேலும், அரசு அலுவலகங்களில் பணம் செலுத்தியதற்கு ஏற்ப மின்சாரம் பயன்படுத்தும், 'பிரிபெய்ட்' மீட்டர் பொருத்துமாறும் தெரிவித்துள்ளது. இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

