தொழிற்சாலைகளுக்கு உயர்கிறது மின் கட்டணம்; வீடுகளுக்கு இல்லை
தொழிற்சாலைகளுக்கு உயர்கிறது மின் கட்டணம்; வீடுகளுக்கு இல்லை
UPDATED : ஜூலை 02, 2023 05:44 PM
ADDED : ஜூலை 01, 2023 06:51 AM

சென்னை: வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின் கட்டணம் யூனிட்டிற்கு, 15 காசு முதல், 25 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கான கட்டண உயர்வை, தமிழக அரசு ஏற்றதை அடுத்து, நுகர்வோர் தலையில் கூடுதல் சுமை ஏறாது.
தமிழக மின் வாரியம், 1.59 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்துமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022 செப்., 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தியது.
மேலும், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை 1 முதல், 6 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த அனுமதியும் அளித்தது. மின் கட்டணம் உயர்த்தி ஓராண்டு கூட ஆகாத நிலையில், மீண்டும் கட்டணம் உயர்த்தும் முடிவுக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆணையம் தானாகவே முன்வந்து, நேற்று முதல், 2.18 சதவீதம் அதாவது 1 யூனிட்டிற்கு, 15 காசு முதல் 25 காசு வரை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், வீடுகளுக்கான கட்டண உயர்வை மட்டும் அரசு ஏற்றுள்ளதால், அதற்கான செலவு தொகை, மானியமாக மின் வாரியத்திற்கு வழங்கப்படும்.
இதனால், வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது. மேலும், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி, கைத்தறி போன்றவற்றுக்கும் ஏற்கனவே இருக்கும் விகிதத்தில், அரசு மானியம் வழங்கப்படும்.
தொழிற்சாலை, வணிகம் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள், யூனிட்டிற்கு கூடுதலாக, 15 காசு முதல், 25 காசு வரை கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
புதிய கட்டண உயர்வால், மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு கூடுதலாக, 300 கோடி முதல், 500 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொது பயன்பாட்டு கட்டணம்
அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்களில், 'காமன் சர்வீஸ்' எனப்படும் பொது சேவை பயன்பாட்டிற்கு, 1 யூனிட் மின் கட்டணம், 8 ரூபாயாகவும்; மாத நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயாகவும் உள்ளது.
இந்த கட்டணங்கள் முறையே, நேற்று முதல் 8.15 ரூபாயாகவும்; 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
சிறிய தொழிற்சாலைகள்
தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 1 யூனிட், 7.50 ரூபாயாக இருந்த மின் கட்டணம், 7.65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்காலிக மின் இணைப்புக்கு 1 யூனிட் கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 12.25 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து கிலோ வாட்டிற்கு மாதம் 550 ரூபாயாக இருந்த நிரந்தர கட்டணம், 562 ரூபாயாக உயர்ந்துஉள்ளது.
புதிய மின் இணைப்பு கட்டணமும் உயர்வு
வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை ஆகிய பிரிவுகளில், புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, இணைப்பு வழங்கும்போது பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், வைப்பு தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணமும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
எந்த பிரிவுக்கு எவ்வளவு உயர்வு?
மின் வாரியம், 150 கிலோ வாட் வரை தாழ்வழுத்த பிரிவிலும்; அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது. உயரழுத்த பிரிவில் பெரிய தொழிற்சாலை, ரயில்வே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவையும், தாழ்வழுத்த பிரிவில் வீடுகள், சிறு தொழிற்சாலைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன
உயரழுத்த பிரிவு:
உயரழுத்த பிரிவில், 1, 2 ஏ, 2 பி, 3, 4, 5 ஆகிய பிரிவுகள் உள்ளன
* பிரிவு 1ல் இடம்பெறும் தொழிற்சாலை, தேயிலை தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு ஒரு யூனிட் கட்டணம், 6.75 ரூபாயில் இருந்து, 6.90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து வசூலிக்கப்படும், 'டிமாண்ட் சார்ஜ்' ஒரு கிலோ வாட்டிற்கு மாதம், 550 ரூபாயில் இருந்து, 562 ரூபாயாக அதிகரித்துள்ளது
* பிரிவு, '2 ஏ'யில் இடம்பெறும் அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயிலுக்கு ஒரு யூனிட், 7 ரூபாயில் இருந்து, 7.15 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ், 550 ரூபாயில் இருந்து, 562 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது
* பிரிவு, '2 பி'யில் இடம்பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், விடுதிகளுக்கு ஒரு யூனிட் கட்டணம், 7.50 ரூபாயில் இருந்து, 7.65 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ், 550 ரூபாயில் இருந்து, 562 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது
* பிரிவு 3ல் இடம்பெறும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஒரு யூனிட் கட்டணம், 8.50 ரூபாயில் இருந்து, 8.70 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ், 550 ரூபாயில் இருந்து 562 ரூபாயாக அதிகரித்துள்ளது
* பிரிவு 4ல் வரும் கட்டுமானம் உள்ளிட்ட தற்காலிக மின் இணைப்பிற்கு ஒரு யூனிட் கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 12.25 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ், 550 ரூபாயில் இருந்து, 562 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது
வீட்டு பிரிவு கட்டணம்

இவ்வாறு, புதிய மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், அதற்காக ஏற்படும் கூடுதல் செலவை மின் வாரியத்திற்கு, தமிழக அரசு வழங்கும். இதனால், வீட்டு நுகர்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படாது. வழக்கம்போல் 100 யூனிட் இலவசம் மற்றும் மானிய மின் கட்டண சலுகை கிடைக்கும்.
பொது பயன்பாட்டு கட்டணம்
அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்களில், 'காமன் சர்வீஸ்' எனப்படும் பொது சேவை பயன்பாட்டிற்கு, ஒரு யூனிட் மின் கட்டணம், 8 ரூபாயாகவும்; மாத நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயம் உள்ளது.
இந்த கட்டணங்கள் முறையே, நேற்று முதல் 8.15 ரூபாயாகவும்; 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
சிறிய தொழிற்சாலைகள்
தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு யூனிட், 7.50 ரூபாயாக இருந்த மின் கட்டணம், 7.65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
* தற்காலிக மின் இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 12.25 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து கிலோ வாட்டிற்கு மாதம் 550 ரூபாயாக இருந்த நிரந்தர கட்டணம், 562 ரூபாயாக உயர்ந்துள்ளது.
புதிய மின் இணைப்பு கட்டணமும் உயர்வு
வீடுகளுக்கு ஒரு முனை, மும்முனை ஆகிய பிரிவுகளில், புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, இணைப்பு வழங்கும்போது பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், வைப்பு தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணமும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
