UPDATED : மே 21, 2025 08:09 AM
ADDED : மே 20, 2025 11:18 PM

சென்னை : தமிழகத்தில், வரும் ஜூலை முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. கடந்த 2022ல் மின் வாரியம், 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் இருந்தது.
அதிருப்தி
அதனால், மின் வாரியம் கேட்டுக்கொண்டபடி, அந்தாண்டு செப்டம்பர் 10 முதல் மின் கட்டணத்தை ஆணையம் உயர்த்தியது. இதுதொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
அத்துடன், கட்டணத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 6 சதவீதம் அல்லது அந்தாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம், இந்த இரண்டில் எந்த சதவீதம் குறைவோ, அந்தளவுக்கு உயர்த்தப்பட வேண்டும்.
கடந்த 2023ல், 2.18 சதவீதமும், 2024ல், 4.83 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில், 2023ல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் பணவீக்க விகிதம், 3.16 சதவீதமாக இருப்பதாக, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, ஆணையம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வரும் ஜூலை முதல் மின் கட்டணம், 3.16 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரும் நிலையில், மின் கட்டண உயர்வால் மக்கள் அதிருப்தி அடைந்து, தேர்தலில் அது எதிரொலிக்கும் என கூறப்பட்டது.
இதனால், 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; இலவச மின்சார சலுகைகள் தொடரும்' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சில தினங்களாக மின் கட்டண உயர்வு குறித்து, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.
எனினும் ஆணையம், மின் கட்டணம் தொடர்பான ஆணை வழங்கும் போது, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக்கூடாது எனவும், தற்போதுள்ள இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும் எனவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
எனவே, வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச மின்சார சலுகைகள் தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழில்கள் முடங்கும்
இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாச்சலம் கூறியதாவது:
வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று, அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், தொழிற்சாலை, வணிகம் உட்பட மற்ற பிரிவுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புஉள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின் பயன்பாட்டு கட்டணம், மின்சார நிலை கட்டணம் உயர்வால், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுாற்பாலைகள் பெரிதும் பாதித்துள்ளன.
எனவே, எந்த பிரிவுக்கும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், அப்படி உயர்த்தினால் செலவை அரசு ஏற்கும் என்றும் அறிவிக்க வேண்டும். அப்படி செய்யாமல், மின் கட்டணத்தை உயர்த்தினால் தொழில்கள் முடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.