'யானைகள் பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்'
'யானைகள் பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்'
ADDED : டிச 06, 2025 02:00 AM
சென்னை: 'இறந்த யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை பிரேத பரிசோதனை செய்யும் போது, இனி முழுமையாக 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும்' என, தமிழக வனத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளையங்கிரி ஆண்டவர் கோவிலில், அக்டோபர் முதல் வாரத்தில், காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்தது.
கோவிலுக்குள் யானை நுழைந்த காட்சிகள், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. கோவிலுக்குள் உலாவிய யானை, இரண்டு நாட்களில் இறந்துள்ளது.
இதற்கான காரணம், இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இறந்த யானையின் உறுப்புகளை, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பவில்லை.
'இறப்பு குறித்து தெரியப்படுத்தாமல், பிரேத பரிசோதனை செய்துவிட்டு வனத்துறையினர் புதைத்துவிட்டனர்' என, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன், வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையீட்டார்.
இதை கேட்ட சிறப்பு அமர்வு, யானை இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களுடன், பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய, வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதை பார்வையிட்ட நீதிபதிகள், 'உயிரிழந்த யானையின் பிரேதப் பரிசோதனையை, ஏன் முழுமையாக 'வீடியோ' பதிவு செய்யவில்லை' என, கேள்வி எழுப்பினர். 'மழை காரணமாக, முழுமையாக வீடியோ பதிவு செய்ய முடியவில்லை' என, வனத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தரப்பில், 'சமீபத்தில் கூட, வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு குட்டி யானை உட்பட, மூன்றுக்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.
' இவற்றை பிரேதப் பரிசோதனை செய்யும்போது, முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'வனத்துறையின் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. இறந்த யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்களை, இனி பிரேத பரிசோதனை செய்யும் போது, உரிய வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, பரிசோதனை முழுதையும் 'வீடியோ'வாக பதிவு செய்ய வேண்டும்.
' இது தொடர்பாக, அனைத்து வனத்துறை அதிகாரிகளுக்கும் முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டு, விசாரணையை 2026 ஜன., 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

