ADDED : ஜூன் 06, 2023 06:42 AM
சென்னை : ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட, 7.19 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடகாவில் இருந்து, சென்னை தி.நகர் வழியாக யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் உதவியை நாடினர்.
இதையடுத்து, தி.நகர் வழியாக சென்ற கார்கள் மற்றும் ஆட்டோக்களை, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 7.19 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ எடையுள்ள இரண்டு யானை தந்தங்களை, ஆட்டோவுக்குள் மறைத்து, ஒரு கும்பல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தந்தம் எடுத்து வர உரிமம் இல்லாததும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களையும், கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரையும், வனத்துறை அதிகாரிகளிடம், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அவர்களை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், வன உயிரின பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துவிசாரித்து வருகின்றனர்.
