ADDED : செப் 15, 2025 10:17 PM

சென்னை : நம் நாட்டில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, இலங்கை துாதரக அதிகாரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அமீர் சுபைர் சித்திக், 51. இவர், இலங்கையில் செயல்படும் பாகிஸ்தான் துாதரகத்தில் விசா பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில், நம் நாட்டில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி, தமிழகத்தில் பாக்., உளவாளிகளை நியமித்து வேவு பார்த்தார். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அமீர் சுபைர் சித்திக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது. மேலும், செப்., 15ம் தேதி காலை, 10:30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது; ஆனால், அமீர் சுபைர் சித்திக் ஆஜராகவில்லை. பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.