முதல்வர்கள் ஓய்வு பெறும் வயது வரைமுறைப்படுத்த வலியுறுத்தல்
முதல்வர்கள் ஓய்வு பெறும் வயது வரைமுறைப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2024 04:05 AM
கோவை : தமிழக உயர்கல்வித் துறையின் கீழ், ஆசிரியர்கள், முதல்வர்கள் பணி ஓய்வு பெறும் வயதில் தொடரும் முரண்பாடுகளை வரைமுறைப்படுத்த வேண்டும். உயர்கல்வித் துறையின் கீழ், அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதி என்ற மூன்று பிரிவுகளில் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இதில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது, 60 ஆக உள்ளது; இதை அனைத்து கல்லுாரிகளும் பின்பற்றுகின்றன. அதே சமயம், முதல்வர்கள் பணி ஓய்வு பெறும் வயதில், பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.
சுயநிதி கல்லுாரிகளில் பணிபுரியும் முதல்வர்களின் ஓய்வு பெறும் வயது மட்டும், 62 ஆக அரசாணையில் உள்ளது. சுயநிதி கல்லுாரிகளை பொருத்தவரையில், முதல்வர்கள் ஓய்வு பெறும் வயது, ஒவ்வொரு பல்கலை பொருத்தும் மாறுபடுகிறது. சேலம், திருவள்ளுவர் பல்கலையில் 65 வயதாக கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன் கூறுகையில், ''உயர்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள், முதல்வர்கள் அனைவருக்கும் வயது 62 ஆக உயர்த்திக்கொடுக்க வேண்டும். அல்லது, 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு பிரிவினருக்கு மட்டும் 62 வயது எனும் சலுகை, பாரபட்சம் காட்டுவதாக உள்ளது. இதுகுறித்த கோரிக்கையை முதல்வர், உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்பியுள்ளோம்,'' என்றார்.