ADDED : ஜூலை 26, 2011 12:35 AM
சென்னை : கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், உமா சங்கரை எதிர்த்து, தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், கோ - ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவு ஊழியர்கள், அதன் மேலாண்மை இயக்குனர் உமா சங்கருக்கு எதிராக, சென்னையில், நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதில், அந்தோணிராஜ் மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு., சங்க துணைப் பொதுச் செயலர் குமார் பேசியதாவது: கடந்த, 1991-1996ல் நலிவடைந்த நிறுவனங்கள் என்று அறிவிக்கப்பட்டதில் கோ - ஆப்டெக்ஸ் ஒன்று. அப்போது, 85 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டில் அந்த இழப்பு சரிகட்டப்பட்டு, 200 கோடி ரூபாய் லாபம் ஈட்டப்பட்டது. இந்த நிதியாண்டில், 800 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ - ஆப்டெக்ஸிற்கு துணி சப்ளை செய்யும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மொத்த உற்பத்தி, 400 கோடி மட்டுமே. கோ - ஆப்டெக்ஸ் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் லாபத்தை எப்படி ஏற்படுத்த முடியும். இதன் பல கிளைகளை அரசு மூடிவிட்டு, இலக்கை எட்ட முடியுமா? இந்நிறுவனத்தில், 'தலை நரைத்தவர்கள் வேலை பார்க்கக் கூடாது' என, உமா சங்கர் உத்தரவிட்டுள்ளார். 1984 க்குப் பின், ஆள் நியமனம் செய்யாத நிறுவனத்தில், இளைஞர்கள் எப்படி இருப்பார்கள். இங்கு தற்காலிக பணி புரியும் பெண் அழகாக இல்லையென்றால், அவரை வேலையிலிருந்து நீக்குவதற்கு உத்தரவிடுகிறார்.
3,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்தனர். இப்போது, 900 பேர் மட்டுமே உள்ளனர். 1981ம் ஆண்டு சட்டப்படி, இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தும், நிரந்தரம் செய்யவில்லை. கோ - ஆப்டெக்ஸ், மீண்டும் மூடு விழாவை நோக்கி சென்று விடுமோ, என்ற பயம் எங்களுக்கு உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர். இந்த முற்றுகைப் போராட்டத்தில், கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.