நகராட்சி பொறியியல் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு நிரப்ப ஊழியர்கள் எதிர்பார்ப்பு
நகராட்சி பொறியியல் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு நிரப்ப ஊழியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 02, 2025 02:05 AM
விருதுநகர்:தமிழகத்தில் நகராட்சி பொறியியல் பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணிகள் மந்தமடைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு நிலை, முதல், இரண்டாம், தேர்வு நிலை நகராட்சிகளில் 2023ல் பணி வரன்முறை நடந்தது. அப்போது சுகாதாரப்பிரிவு, நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவுகளில் அலுவலர்கள் ஆய்வாளர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. ஏற்கனவே மக்கள் தொகை பெருக்கத்தால் நகராட்சிகளில் அடிப்படை வசதி, வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கும் சூழலில் பணியிடங்களை அதிகப்படுத்த கோரிக்கை எழுந்தது.
நகரமைப்பு பிரிவில் அலுவலர் பணியிடங்கள் பல நகராட்சிகளில் காலியாக உள்ளது. ஆய்வாளர்களே பார்க்கின்றனர். பொறியியல் பிரிவுகளில் பணி ஆய்வாளர்கள் இருவர், வரைவாளர், எலக்ட்ரீஷியன், பிட்டர் ஆகிய பணியிடங்கள் பல இடங்களில் காலியாக உள்ளன. பணி ஆய்வாளர்கள் தான் குடிநீர் பதிக்கும் பணிகளை களத்தில் ஆய்வு செய்வர். வரைவாளர், பிட்டர் ஆகியோர் தான் பாதாளசாக்கடை பணிகளில் எங்கெங்கு இணைப்பு உள்ளது என்பதை அறிந்து வைத்திருப்பர்.பிட்டர் பணியிடத்தில் ஒருவர் ஓய்வு பெற்றால் புதிய பணியிடம் நிரப்புவது குதிரைக் கொம்பாக உள்ளது.
நகராட்சியில் உதவி பொறியாளர்கள் 8 பேர் இருக்க வேண்டிய இடங்களில் 3 முதல் 5 பேர் வரை தான் இருக்கின்றனர். தெருவி ளக்கு எரியவில்லை என்றாலோ, பைப்லைன் பழுது பற்றி புகார் அளித்தாலோ தீர்வு காண தாமதமாகிறது. எனவே காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

