வெளியூர் கார்டுகளுக்கு ரேஷன் தராமல் விரட்டும் ஊழியர்கள்
வெளியூர் கார்டுகளுக்கு ரேஷன் தராமல் விரட்டும் ஊழியர்கள்
ADDED : ஜன 26, 2025 01:06 AM
சென்னை: இடம் பெயருவோர் வசதிக்காக, கார்டுதாரர்கள் தமிழகம் முழுதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் உணவுப் பொருட்களை வாங்கலாம். ஆனால், கடைக்கு கூடுதல் பொருட்களை அனுப்பாததால், மற்ற கடைகளுக்கு உரிய கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க ரேஷன் ஊழியர்கள் மறுக்கின்றனர்.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை, மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு உட்பட்ட கடையில் மட்டும் பொருட்கள் வாங்க முடியும். மத்திய அரசு, நாடு முழுதும் இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது.
இத்திட்டத்தில் தமிழகம், 2020 அக்டோபரில் இணைந்தது. இத்திட்டத்தால், எந்த மாநில கார்டுதாரரும், தாங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடையில் அரிசி, கோதுமை வாங்கலாம்.
இத்திட்டத்துடன், தமிழக கார்டுதாரர்கள் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.
இதனால், சொந்த ஊர்களில் கார்டு வாங்கியவர்கள், வேலைக்காக தங்கியுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தற்போது, பல ரேஷன் கடை ஊழியர்கள், மற்ற கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்காமல் திருப்பி அனுப்புகின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ''பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று திரும்பிய பலர், பெற்றோரையும் உடன் அழைத்து வந்துள்ளனர். அவர்களுக்கு உரிய ரேஷன் கார்டை, சென்னையில் உள்ள கடையில் காட்டி பொருட்களை கேட்டால் தருவதில்லை'' என்றனர்.
இதுகுறித்து, கடை ஊழியர்கள் கூறியதாவது:
பிற கடைக்கு உரியவர்கள் பொருட்கள் வந்து கேட்டால் தருவதற்காக கூடுதலாக, 5 சதவீத பொருட்கள் அனுப்பப்பட்டன.
தற்போது, அதை அனுப்புவதில்லை. கடைக்கு அனுப்பும் பொருட்கள், கடைக்கு உரியவர்களுக்கே சரியாக உள்ள நிலையில், மற்ற கடைக்கு உரியவர்களுக்கு எப்படி வழங்க முடியும்?
இவ்வாறு அவர்கள் கூறினர்.