காலி மது பாட்டில் பெறும் திட்டம்; கூடுதல் 10 ரூபாய்க்கு 'ஸ்டிக்கர்'
காலி மது பாட்டில் பெறும் திட்டம்; கூடுதல் 10 ரூபாய்க்கு 'ஸ்டிக்கர்'
ADDED : ஜூலை 07, 2026 11:28 PM

சென்னை: காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்காக, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை சட்டப்பூர்வமாக்க, பாட்டில்களில் தனி, 'ஸ்டிக்கர்' ஒட்ட, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளில் சிலர், மதுவை குடித்து விட்டு, காலி கண்ணாடி பாட்டிலை சாலைகளில் வீசி எறிகின்றனர். உடைந்த பாட்டிலை மிதிக்கும் விலங்குகள் உயிரிழக்கின்றன.
எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காலி மது பாட்டில்களை கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தை, டாஸ்மாக் செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், மது பாட்டில் விற்கும்போது, கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை கடையில் திரும்ப கொடுத்ததும், 10 ரூபாயை பணியாளர்கள் திருப்பி தருவர்.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு கூடுதலாக, 10 ரூபாய் வசூலிப்பதற்கு, மது பிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே, அதை அவர்களிடம் தெரியப்படுத்தி வசூலிப்பதற்காக, மதுபான ஆலைகளில் இருந்து பாட்டிலில், அதற்கான விலை 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுவதுபோல், 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதற்கும், தனியாக ஸ்டிக்கர் ஒட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது.
அரசிடம் அனுமதி பெற்று, விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
