காலி மது பாட்டில் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் மாநிலம் முழுதும் அமல்
காலி மது பாட்டில் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் மாநிலம் முழுதும் அமல்
ADDED : பிப் 06, 2025 01:39 AM
சென்னை:'மாநிலம் முழுதும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும்' என ஐகோர்ட்டில் 'டாஸ்மாக்' நிர்வாகம் தெரிவித்தது.
காலி மது பாட்டில்களை கண்ட இடத்தில் வீசுவதால், சுற்று சூழலுக்கு பாதிப்பு நேர்வதுடன், வன விலங்குகள், பிராணிகளுக்கும் துன்பம் உண்டாவதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இது குறித்து வழக்கும் தொடரப்பட்டது.
மலைப் பிரதேசங்களில் உள்ள மது கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து, காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால் 10 ரூபாயை திரும்ப வழங்கும்படி, ஐகோர்ட் தனி பெஞ்ச் உத்தரவிட்டது.
வழக்கு நேற்று நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. 'டாஸ்மாக்' அறிக்கை தாக்கல் செய்தது.
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியிலும் கோவை, பெரம்பலுார், கன்னியாகுமரி, தேனி, தர்மபுரி, திருவாரூர், நாகை வனப்பகுதிகளிலும் அமல்படுத்தி உள்ளதாக அதில் தெரிவித்தது.
கடந்த டிசம்பர் வரை, அந்த பகுதிகளில் உள்ள 848 கடைகளில், 77 கோடி 77 லட்சத்து 55,496 மது பாட்டில்கள் விற்கப்பட்டு, அதில் 97 சதவீதம் அளவுக்கு, அதாவது 75.48 கோடி பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த வகையில், 15.94 கோடி ரூபாய் தனியாக வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
காலி பாட்டில்களை விற்றதில் 16.83 கோடி கிடைத்துள்ளது, என்று தெரிவித்த டாஸ்மாக் நிர்வாகம், இத்திட்டம் ஏப்ரல் மாதம் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் என்றது.
கூடுதலாக வசூலித்த பணத்தை, நீர்நிலை, வன மேம்பாடு திட்டங்களுக்கு பயன்படுத்த வழி சொல்லலாம் என்று கூறி, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.