ஈமு எக்., டிராபிக் மாஸ்டர், ஜாலி பிஷ், சிவகாசியில் இந்தாண்டு புதுவரவு பட்டாசுகள்
ஈமு எக்., டிராபிக் மாஸ்டர், ஜாலி பிஷ், சிவகாசியில் இந்தாண்டு புதுவரவு பட்டாசுகள்
ADDED : அக் 25, 2024 12:41 AM

தீபாவளிக்கு இந்தாண்டு புது வரவாகஈமு எக், டிராபிக் மாஸ்டர், ஜாலிபிஷ், பாப்கார்ன், பன்பட்டர் பிளைவ் என வானில் வர்ணஜாலம் காட்டவும், தரையில் தகதகவென ஜொலிக்கவும் விதவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தீபாவளிக்கு அறிமுகமாக உள்ள அவற்றில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்.
இன்பமான ஈமு எக்: ஈமு கோழியை பார்ப்பதே அபூர்வம். அதிலும் அந்தக் கோழி முட்டை இடுவதை பார்க்க வேண்டும் என்றால் ஈமு எக் பட்டாசு உள்ளது. இதனை பற்ற வைத்தால் தகர செட்டில் மழை விழுந்தால் வரும் சத்தம் போல சடசடவென சத்தமிட்டு இறுதியில் பட்டாசு பின்பகுதியில் உள்ள பலுான் முட்டை போல் வரும். பார்த்து ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும். எடுத்து பொரிக்க நினைக்கக் கூடாது.
போக்குவரத்தை கட்டுப்படுத்தும் டிராபிக் மாஸ்டர்: இதை கையில் பிடித்து பற்ற வைக்கலாம். பற்றவைத்த உடன் சிவப்பு, மஞ்சள், பச்சை என அடுத் தடுத்து ஒளிரும். சாலையில்தான் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை.இதை வெடிக்கும் போதாவது கடைபிடியுங்களேன்.
கலக்கல் கலர் ஜாலி பிஷ்: எந்த வகை மீன் என்றாலும் ஒன்று குழம்பு வைக்கலாம் அல்லது பொரித்து சாப்பிடலாம். ஆனால், இந்த மீனை பற்ற வைத்தால் அதன் வாயிலிருந்து நெருப்பு பீய்ச்சி அடிக்கும். மீனை காப்பாற்ற வேண்டும் என தண்ணீரில் போட்டு விடக்கூடாது. தரையில்தான் வெடிக்க வேண்டும்.
படபட பாப்கார்ன்: இந்த பட்டாசினைபற்ற வைத்தவுடன் பாப்கார்னை பொரிக்கும் போது வரும் சத்தம் போல படபடவென பொரிந்து வரும். அந்தப் பாப்கானை சட்டியில் பொரிக்க வேண்டும். இந்தப் பாப்கார்னை தரையில்தான் பொரிக்க வேண்டும். எடுத்து சாப்பிட நினைக்கக் கூடாது.
லுாட்டி அடிக்கும் லுானி டியூன்ஸ்: குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பட்டாசை பற்ற வைத்தால் கார்ட்டூன் முயலின் வாயிலிருந்து கலர் கலராக தீப்பொறி பறக்கும். அதனுடன் விளையாட நினைக்கக் கூடாது. ஓசைப்படாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
பரவசமூட்டும் பன்பட்டர்பிளை: இதை பற்ற வைத்தவுடன் வண்ணத்துப்பூச்சிகள் போல கிளம்பி வானில் சிறகடித்து பறக்கும். அதனைப் பிடிக்க நினைக்கக் கூடாது. ரசிக்க மட்டுமே வேண்டும்.
ஆசையை துாண்டும் ஆப்பிள்: ஆப்பிள் பழத்தின் விலை ஏறி விட்டதா? கவலை வேண்டாம். இதோ வந்து விட்டது மலிவு விலை ஆப்பிள். இந்தப் பட்டாசை பற்ற வைத்தால் ஆப்பிள் கலரில் வட்டமாக தீப்பொறி கிளம்பி வரும். ஒரு கடி கடிக்கலாம் என நினைக்கக் கூடாது. அந்த ஆப்பிளை கடித்தால் இனிக்கும். இந்த ஆப்பிளை கடித்தால் வெடிக்கும்.
அசர வைக்கும் அலெக்சாண்டர்: இந்தப் பட்டாசுகள் பற்ற வைத்தால், 350 அடி உயரம் வரை சென்று 70 அடி சுற்றளவில் வானில் வர்ண ஜாலம் காட்டும். பார்த்துக் கொண்டே இருந்தால், கழுத்து வலிக்கு நாங்க கேரண்டி!

