ஈமு நிதி நிறுவன மோசடி; குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; ரூ.19 கோடி அபராதம்
ஈமு நிதி நிறுவன மோசடி; குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; ரூ.19 கோடி அபராதம்
ADDED : ஜன 29, 2025 05:04 PM

கோவை: ஈரோடு சுசி ஈமு பண்ணை மேலாண் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு பார்மஸ் எனும் நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை அள்ளி வீசினர். ஈமு பண்ணை அமைத்து ஈமு கோழி வளர்த்தால் ஊக்கத்தொகை, முதலீடு செய்த பணம் திருப்பி தரப்படும் என அறிவித்தனர். இதனை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் முதலீடு செய்தனர்.
ஆனால், கூறியபடி ஊக்கத்தொகையும் வழங்காமல், முதலீடு செய்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சுசி ஈமு பண்ணை மேலாண் இயக்குநர் குருசாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சுசி ஈமு கோழி மோசடி தொடர்பான வழக்கு கோவை 'டான்பிட்' கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நிறுவன மேலாண் இயக்குனர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 19.03 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

