அமைச்சர் நேரு தம்பி ரவிச்சந்திரனிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
அமைச்சர் நேரு தம்பி ரவிச்சந்திரனிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
ADDED : ஏப் 10, 2025 06:06 AM
சென்னை : அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம், இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் நேரு மகனும், பெரம்பலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யுமான அருண் ஆகியோர், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.
சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெரம்பலுார் உள்ளிட்ட நகரங்களில், இவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் டி.வி.எச்., கட்டுமான நிறுவன அலுவலகம் என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், 7ம் தேதி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதில், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனைக்கு பின், அவரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, நேற்று முன்தினம் ரகசியமாக விசாரித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், ஆர்.ஏ.புரம் மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள ரவிச்சந்திரன் வீடு, கிருஷ்ணாபுரி முதல் தெரு, பிஷப் கார்டனில் உள்ள அலுவலகம், அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில், மூன்றாவது நாாளாக நேற்றும் சோதனை நடந்தது.
அப்போது, அவர் நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரரான தீபக் என்பவரை, ரவிச்சந்திரன் வீட்டுக்கு அழைத்து வந்து, இருவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், ரவிச்சந்திரனை மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, நேற்று பிற்பகல் ஆஜரான ரவிச்சந்திரனிடம், இரண்டாவது நாளாக, பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.