UPDATED : ஜன 20, 2024 02:29 AM
ADDED : ஜன 19, 2024 11:15 PM

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக, சென்னையில் ஒரே நேரத்தில், மருந்து கம்பெனி அதிபர், ஆடிட்டர், தனியார் கட்டுமான நிறுவன தலைமை செயல் அதிகாரி வீடு, அலுவலகம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை பூங்கா நகர் ரகுநாயகுலு தெருவை சேர்ந்தவர் ராம் லால். இவர் அதே பகுதியில், 'கவர்லால் அண்ட் கோ' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அப்பகுதியில், டி.கே.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனமும் செயல்படுகிறது.
இந்நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை, 7:00 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில், ஓசன் லைப்ஸ்பேஸ் இந்தியா என்ற கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு பணிகளை மேற் கொள்ளும் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை செயல் அதிகாரி பீட்டர், சென்னை, கே.கே.நகர், 80வது தெருவில், ரமணியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவருக்கு கோட்டூர்புரம் ரஞ்சித் சாலையிலும் வீடு உள்ளது. இவர் பணிபுரியும் நிறுவனம், கடந்த நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்நிறுவனம் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறிந்து, அந்த நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் பீட்டர் வீடுகளில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை, 7:50 முதல் மாலை, 6:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அபிராமபுரம், 3வது தெருவில், டாக்டர் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர், எம்.ஜி.எம்., நிறுவன உரிமையாளர்களின் உறவினர் என்று கூறப்படுகிறது. இவரது வீட்டிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அபிராமபுரம் 2வது பிரதான சாலையில், ஜெயஸ்ரீ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆடிட்டர் சுப்பிரமணியன் அய்யர் வீட்டிலும் நேற்று காலை, 7:00 மணியில் இருந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் வீடு, அலுவலகம் உட்பட, சென்னையில் நேற்று, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.