'எம்புரான்' திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
'எம்புரான்' திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : ஏப் 05, 2025 01:33 AM

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, எம்புரான் பட தயாரிப்பாளரின் வீடு மற்றும், 'கோகுலம் சிட் பண்டு' நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த, 2019ல், மலையாளத்தில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில், லுாசிபர் என்ற படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகமாக, எம்புரான் என்ற படம், கடந்த மாதம், 27ம் தேதி வெளியானது.
இப்படத்தை, 'கோகுலம் மூவிஸ், லைகா புரொடக் ஷன்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குஜராத் கலவரம் மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான சர்ச்சை காட்சிகளும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மோகன்லால் மன்னிப்பு கேட்டார்.
குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் அப்படியே உள்ளன. இதனால், எம்புரான் படத்திற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு நீடிக்கிறது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் மற்றும் கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைவர் கோகுலம் கோபாலன் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, கோகுலம் சிட் அண்டு பைனான்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள கோகுலம் கோபாலன் வீடு உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த, 2017ல், கோகுலம் சிட் மற்றும் பைனான்ஸ் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக, வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், 78 இடங்களில் கசோதனை நடத்தினர்.
இச்சோதனையில், 1,100 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. அதில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், தற்போது சோதனை நடத்தியதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

