மருந்து நிறுவன அதிபர், அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு'
மருந்து நிறுவன அதிபர், அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை 'ரெய்டு'
ADDED : அக் 14, 2025 12:24 AM

சென்னை : 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதை, அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், ஸ்ரீசன் பார்மசியூட்டிகல் உரிமையாளர் ரங்கநாதன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு, சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வரும், மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரி கார்த்திகேயன் வீடு ஆகியவற்றில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த ஜூலையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன், தற்போது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ஸ்ரீசன் பார்மசியூட்டிகல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக சோதனை செய்யாததால், தமிழக சுகாதாரத்துறை முதுநிலை மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள இவர்களின் வீடுகளிலும் நேற்று சோதனை நடந்தது.
அதேபோல, சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மசியூட்டிகல் மருந்து தயாரிப்பு நிறுவனத்திலும், பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ரங்கநாதனை மத்திய பிரதேசத்தில் இருந்து, அம்மாநில போலீசார் நேற்று மதியம் சுங்குவார்சத்திரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.