தமிழகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி நடவடிக்கை இல்லையே; காரணத்தை கேட்கிறார் சீமான்!
தமிழகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி நடவடிக்கை இல்லையே; காரணத்தை கேட்கிறார் சீமான்!
ADDED : செப் 01, 2025 05:47 PM

தென்காசி: 'தமிழகத்தில் எத்தனை அமலாக்கத்துறை ரெய்டு வந்து இருக்கிறது. ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை. காரணத்தைச் சொல்லுங்கள்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்காசியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: வந்தவர் போனவர்களுக்கு தமிழகம் எங்கும் சிலை வைத்துள்ளார்கள். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றால் நெற்காட்டான் சேவலுக்கு வர வேண்டியதாக இருக்கிறது. நாம் தமிழர் ஆட்சியில் பூலித்தேவனின் புகழ் தமிழகம் எங்கும் எடுத்துச் செல்லப்படும்.
அறிவாளிகள்
முடி சூடும் பெருமானை முடி வெட்டும் பெருமான் என்று எழுதும் அளவிற்கு அறிவாளிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வுத் தாளை உருவாக்கிய குழுவில் உள்ளனர். இந்த ஆட்சி முடியட்டும் அப்படிங்கிற பயணம் இங்கிருந்து தொடங்குகிறது. எல்லா மாநிலத்திலும் அமலாக்கத்துறையினர் ரெய்டு போன இடத்தில், கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர்.தமிழகத்தில் எத்தனை ரெய்டு வந்து இருக்கிறது. ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை என்ன?
எல்லோருடைய வீடுகளுக்கும் அமலாக்கத்துறையினர் ரெய்டு போனார்கள். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை. ரெய்டு போனது தெரிந்தது. வெளியே வந்ததும் தெரியவில்லை. நடவடிக்கை என்னன்னும் தெரியவில்லை. காரணம் என்ன? காரணத்தைச் சொல்லுங்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது. இரண்டு பேருமே ஒரே ஆட்கள் தான். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்கள் நேரடியாக கூட்டணியில் இருக்கிறார்கள். இவர்கள் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர். இவ்வாறு சீமான் கூறானார்.