செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய கோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தல்
செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய கோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தல்
ADDED : டிச 14, 2024 10:06 PM
புதுடில்லி:'செந்தில் பாலாஜி சாட்சிகளுக்கு அழுத்தம் தந்து, வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனடிப்படையில் பணமோசடி நடந்ததாக, அமலாக்கத் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து, கடந்த ஆண்டு ஜூனில் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இந்த வழக்கில், அவருக்கு கடந்த செப்., 26ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்த அவர் ,உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதை குறிப்பிட்டு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, வித்தியாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஒகா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியாக உள்ளவர்கள், அவருக்கு கீழ் ஏற்கனவே வேலை செய்தவர்கள். செந்தில் பாலாஜி தற்போது மீண்டும் அமைச்சராக உள்ளதால், இந்த வழக்கு விவகாரத்தில், தனக்கு சாதகமாக செயல்பட வலியுறுத்தி, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையும் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகிறது. நீண்ட காலத்துக்கு விசாரணையை இழுத்துக் கொண்டே செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், கூடுதல் சாட்சிகளை வழக்கில் சேர்த்து செயல்படுகின்றனர். இதற்கு விசாரணை அமைப்புகளும் ஒத்துழைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும். பல முனைகளிலும் கடுமையான அழுத்தம் கொடுத்து தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.